வழமைக்குத் திரும்பியது சீனாவின் வஹான் நகரம்
கடந்த ஜனவரி 23ம் திகதி முதல் முடக்கப்பட்டிருந்த வஹான் நகரம் பெரிதும் வழமைக்குத் திரும்பியுள்ளது. மக்கள் ஏப்ரல் 7ம் திகதி முதல் பிறவிடங்களுக்குத் தடைகள் இன்றி செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
சீனாவின் Hubei மாகாணத்தில் உள்ள வஹான் நகரத்திலேயே கோவிட் 19 வைரஸின் தொற்று முதலில் அவதானிக்கப்பட்டது. இத்தொற்று பெருகி மக்களின் உயிர் குடிக்க ஆரம்பித்துவிட்ட நிலையில், நகரம் முற்றிலுமாக முடக்கப்பட்டிருந்தது. இங்கு 11 மில்லியன் மக்கள் முடக்கப்பட்டிருந்தனர்.
இந்த முடக்கம் மனிதவுரிமைகளுக்கு முரணாகவும் இருந்தது என்று கூறப்பட்டாலும் சீனா மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் அந்த நகரத்தை பெரும் இழப்புகளில் காப்பாற்றியிருக்கின்றது.
இந்நகரத்தில் தொற்று பரவும் நிலை கட்டுப்பாட்டுக்கு வந்ததையடுத்து வணிக நிறுவனங்களும் பேரங்காடிகளும் திறக்கப்பட்டிருந்தன. எனினும் மக்கள் நடமாட்டத்துக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கவில்லை.
கடந்த ஒரு வாரத்தில் இத்தொற்று எங்கும் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை. இதையடுத்து வஹான் நகர மக்கள் பிற இடங்களுக்குச் செல்லவும் நடமாடவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொலைபேசிகள் தரவிறக்கப்பட்டிருக்கும் நலத்துறைச் செயலி அதைக் கொண்டிருப்பவர் தொடர்பில் பச்சை சைகை கொண்டதாக இருக்க வேண்டும். இது முற்றிலும் நலம் மிக்கவர்கள் என்பதைக் குறிக்கும். இவர்களே வெளியில் நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாளை முதல் வஹான் விமான நிலையத்தில் இருந்து 200 விமானங்கள் பறக்கவுள்ளன. இதில் 10000 பேர் பயணம் செய்யவுள்ளனர்.
எனினும் பெய்ஜிங் உட்பட பல மாகாணங்களி; இத்தொற்று குறைந்தளவில் பரவி வருகின்றது. அங்கு கட்டுமையான கட்டுப்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Comments
Post a Comment