Skip to main content

கோவிட் -19: கனடிய பொருளாதார வாழ்வியல் மாற்றம்!

சீனாவின் வூஹானில் இருந்து பரவத் தொடங்கிய கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்று இருநூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் ஏற்படுத்திய தாக்கம் சுமார் 2.7 மில்லியன் மக்களை பாதித்துள்ளது. இவர்களில் சுமார் ஒரு இலட்சத்து தொன்னூறாயிரத்தும் மேற்பட்ட மக்களை காவு கொண்டுள்ளது. இதுவரை ஏழு இலட்சத்து முப்பத்தெட்டாயிரம் பேர் வரை குணமடைந்துள்ளனர்.
இந்த வரிசையில், கனடாவில் இதுவரை நாற்பத்தி இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இவர்களில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் மரணித்துள்ளனர். சுமார் பதினைந்தாயிரம் பேர் வரையில் குணமடைந்துள்ளனர்.
கோவிட்-19 தொற்றால் உலகப் பொருளதாரம் பாரிய வீழ்ச்சியை கண்டுள்ளது. இத்தொற்றால் ஏற்படும் பீதியை விட, ஒவ்வொரு நாடுகளிலும் ஆட்சியில் உள்ள அரசுக்கு பொருளாதார சரிவால்; ஏற்படும் பீதியின் மத்தியில் தம்மை நிலை நிறுத்த பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றன.
கனடாவின் பத்து மாகாணங்கள் மூன்று பிராந்தியங்களில் நுனவுட் பிராந்தியம் தவரிந்த ஏனைய இடங்கள் அனைத்திலும் இதுவரை தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு பதிவாகியுள்ளது.
ஆகக் கூடுதலாக குபெக்கில் சுமார் இருபத்திரெண்டாயிரம் பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட மரணங்கள் சம்பவித்துள்ளன. இங்கு நிலைமையைக் கட்டுப்படுத்த மத்திய அரசிடம் கோரப்பட்ட படைத்துறையின் உதவிக்கு அமைய ஆயிரம் படையினர் வரை ஏற்கனவே பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அடுத்தாக ஒன்டாரியோவில் சுமார் பதின்மூவாயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் எழுநூற்றுக்கும் அதிகமானோர் மரணித்துள்ளனர்.
குபெக்கிலும், ஒன்டாரியோவிலும் இறந்தோரில் குறிப்பிடத்தக்க கூடுதலான சதவீதமானோர், நீண்டகால மருத்துவப் பராமரிப்பு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த மூதாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்டகால மருத்துவப் பராமரிப்பு நிலையங்களில் உதவி புரிவதற்கு மத்திய அரசிடம் கோரப்பட்ட உதவிக்கு அமைய, படைத்துறையினர் எதிர்வரும் வாரங்களில் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஒன்டாரியோவைப் பொறுத்தவரை, குடும்ப மருத்துவர்களின் மருத்துவ நிலையங்கள் உள்ளிட்ட பரிசோதனை மையங்கள் தொடர்ந்தும் இயங்க வேண்டுமெனில், அவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படவேண்டுமென ஒன்றாரியோ மருத்துவர்கள் சங்கம் கேட்டுள்ளது.
இவற்றின் வருமானத்தின் 70 சதவீதத்தை வட்டியில்லாக கனடாக வழங்க அரசு முன்வந்துள்ள போதும், அது போதுமனாதல்ல என்று குறிப்பிட்டுள்ள சங்கத்தின் தலைவர் மருத்துவர் சொஹெய்ல் காந்தி(Sohail Gandhi) நோயளர்களின் பிரசன்னம் குறைவடைந்துள்ளதுடன், பயன்படுத்தப்படவேண்டியுள்ள பாதுகாப்புக் கருவிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாலும் மருத்துவர்களால் செலவுகளைச் சமாளிக்க முடியாதிருப்பதாக தெரிவிக்கின்றார்.
இதேவேளை, ஒன்றாரியோவில் வருமானம் குறைந்தோர் வாழும் சமூகங்களில் கொறோனா நுண்மித் தொற்று பரவும் ஆபத்து அதிகமாக இருப்பதாக ரொறன்றோ பல்கலைக்கழக பொதுச் சுகாதாரக் கற்கைகள் நிலையமான Dalla Lana School இன் தலைவர் Adalsteinn Brown கூறியுள்ளார்.
அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களும், லத்தீனோக்களும் கொறானா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர், கனடாவில் கறுப்பினத்தவர்கள் மிக அதிகமாக வாழும் ஒன்டாரியோவில், ஏற்கனவே அச்சமூகத்திடையேயான மருத்துவப் பராமரிப்பு தொற்றுத் தொடர்பான விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் பின்தங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இன ரீதியிலான தரவுகள் திரட்டப்பட்டாலே, பாதிக்கப்படக் கூடியோரை இலக்கு வைத்துத் தடுப்பு நடவடிக்கைகளும், சிகிச்சையும் வழங்கப்படலாமென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒன்டாரியோவில் அவசரகால நிலைப் பிரகடணம் மார்ச் 02ம் வாரம் முதல் அமுலில் உள்ள நிலையில், பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. எனினும் மட்டுப்படுத்தப்பட்ட இணையக் கல்வி நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
அவ்வாறே ஒன்டாரியோ மாகாண நீதிமன்றத்தின் செயற்பாடுகளும் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாகாண மேல் நீதிமன்றங்களில் ஜூரர் குழு விசாரணை மேற்கொள்ளும் செயற்பாடுகள் செப்ரெம்பர் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
கோவிட்-19 நுண்மித் தொற்றுக்கு எதிரான தடுப்பு மருத்து குறித்த ஆய்வுக்கு மத்திய மாகாண அரசுக்கள் நிதி ஒதுக்கீட்டை அறிவி;த்துள்ளன.
கொறோனா நுண்மித் தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிப்பதற்கும், சிகிச்சை முறைகளை உருவாக்குவதற்கும் ஒரு பில்லியன் டொலரிலும் அதிகமான பணத்தை ஒதுக்குவதாகக் மத்திய அரசு அறிவித்தது.
ஏற்கனவே மார்ச் மாதம் அறிவித்த 275 மில்லியன் டொலருக்கு மேலதிகமாக ஒரு பில்லியன் டொலர் ஒதுக்கீட்டை பிரதமர் ஜஸ்ரின் ரூடோ அறிவித்தார்.
அத்துடன் கோவிட்-19 பரவலுக்கு எதிரான நடடிக்கைகளை மேற்பார்வை செய்வதற்கு மூத்த மருத்துவர்களை உள்ளடக்கிய செலணிக் குழுவொன்றை அமைப்பதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
தடுப்பு மருந்துகளையும், சிகிச்சைகளையும் கண்டுபிடிப்பதற்கு முற்பட்டுள்ள நிறுவனங்களுக்கு மேலும் 192 மில்லியன் டொலரை வழங்குவதாகக் மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.
இவ்வாறே கோவிட்-19 தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்து உள்ளிட்ட ஆய்வுப் பணிகளுக்கு 20 மில்லியன் டொலரை ஒதுக்குவதாக ஒன்டாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் கடந்த திங்கட்கிழமை அறிவி;த்தார்.
கனடிய நாடாளுமன்ற அமர்வுகள் மட்டுப்படுத்தப்பட்ட உறுப்பினர்களுடன் வாராந்தம் ஒவ்வொரு புதன்கிழமையும் கூடுகின்றது. ஏனைய அமர்வுகள் இணைய வழிமூலமான கானொளி அமர்வாக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கொண்ட அமர்வாக நடைபெறுகின்றது.
கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான எல்லைப் பகுதியூடாக தற்சமயம் மட்டுப்படுத்தப்பட்ட அத்தியாவசிய போக்குவரத்துக்கள் மட்டும் நடைபெறுகின்றன.
இந்த உடன்பாடு கடந்தவாரத்துடன் காலவதியாகிய நிலையில், அடுத்துவரும் 30 நாட்களுக்கு இந்த நடைமுறையை நீடிப்பதாக மத்திய அரசு அறிவித்தது.
எனினும் எல்லைப் பகுதியை திறப்பதற்கு அமெரிக்க நிர்வாகம் விருப்பம் வெளியிட்டுள்ள போதிலும், அமெரிக்காவில் பரவிச் செல்லும் கொறோனா நுண்மித் தொற்றுக் காரணமாக ஒன்டாரியோ, குபெக் உள்ளிட்ட மாகாண அரசுக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் கனேடியர்கள் நாடு திரும்புவதற்கு ஏதுவாக 11 அமெரிக்க விமான நிலையங்களில் இருந்து கனடாவுக்கான விமான சேவைகளை மேற்கொண்டு வந்த எயார் கனடா விமானங்கள், எதிர்வரும் 26 ஆம் நாளின் பின்னர் இந்தச் சேவையை இடைநிறுத்தவுள்ளதாகவும், அரசின் கட்டுப்பாடுகள் இல்லையென்றால் மே 22 ஆந் நாள், அது மீண்டும் ஆரம்பமாகுமெனவும் அறிவித்துள்ளது.
இவற்றுக்கு மேலதிகமாக பெருநிறுவனங்களை இயங்க வைப்பதில் மத்திய அரசு பிரயத்தனங்களை மேற்கொள்டுள்ளது.
மக்களுக்கு அவசரகால நிதியுதவி வழங்கியுள்ள மத்திய அரசு, வர்த்தக நிறுவனங்களுக்கும் வட்டியில்லாக் கடனை வழங்குகின்றது.
அத்துடன் இந்த இடர்காலத்தில், பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கும், இளையோருக்குமான நிதி உதவிகள் மற்றும், மாணவர்களின் உயர்கல்விக் கடன்களை குறிப்பிட்ட காலத்திற்கு இடைநிறுத்தல் உள்ளிட்ட அறிவிப்புக்களும் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

ஓன்டாரியோவில் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

ஓன்டாரியோவில் கோவிட்-19 கொறோனா நுன்மித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இன்று மீண்டும் அதிகரிப்பு நிலை பதிவாகியது. இன்றைய தினம் புதிதாக 511 தொற்றுக்களும் 55 இழப்புக்களும் பதிவாகியது. இந்நிலையில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 17119 ஆகவும் இவர்களில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1249 ஆகவும் உயர்வடைந்தது. நேற்றைய தினம் 421 தொற்றுக்களும், 39 இழப்புக்களும் பதிவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் இந்த அதிகரிப்பு நிலை காணப்படுகிறது. நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் கோவிட்19 தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கான காரணமாக பார்க்கப்படுகின்றது. ஒன்டாரியோவில் உள்ள 910 நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களில் கடந்த 24 நேரத்தில் சுமார் 49 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அத்துடன் குறித்த இல்லங்களில் இருந்து 167 புதிய தொற்றுக்களும் பதிவாகியுள்ளன. அத்துடன், கோவிட்19 தொற்றிற்கு உள்ளானவர்கள் இனம் காணப்பட்டவர்களில் இதுவரை 11,390 பேர் குணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஒன்டாரியோவி...