கோவிட்-19 கொறொனா கொல்லுயிரி தொற்றை கட்டுப்படுத்தும் வண்ணம் ஒன்டாரியோ மாகாணத்தில் அமுலில் உள்ள அவசரகால நிலைப் பிரகடணத்தை மேலும் 28 நாட்களுக்கு நீடிப்புச் செய்யும் பிரேரணையை நாளை கூடும் சட்டசபையில் முதல்வர் டக் ஃபோர்ட் கொண்டுவரவுள்ளார்.மாகாண முதல்வரின் அவசர நிலை மேலாண்மை மற்றும் சிவில் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், கடந்த மார்ச் 17ம் நாள் அறிவிக்கப்பட்ட அவசரகால நிலைப் பிரகடணத்துக்கு அமைவாக பள்ளிக்கூடங்கள், குழந்தைகள் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் அற்ற வியாபாரங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
அத்துடன் மக்கள் ஒன்று கூடுவது, முகாம் இடுவது உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளுக்கும் தடைவிதித்தும், கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாளை அவசரமாக கூடும் சட்டசபையில் அவசரகால நிலைப் பிரகடண நீடிப்பு, கல்விசார் நடவடிக்கை, குழந்தைகள் பராமரிப்பு மற்றும் நகரசபையின் நிதி உதவியுடன் இயங்கும் வாழ்விட உதவிகள் திட்டங்களை இந்த நெருக்கடியான காலகட்டத்தில் கையாள்வது போன்ற விடயங்கள் குறித்து சட்ட மூலங்கள் நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அசாதாரண சூழலில் மக்களின் பாதுகாப்பையும் நலனையும் கருத்திற் கொண்டு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ள மாகாண அரசு, இவற்றால் மக்கள் எதிர்நோக்கும் பாதிப்புக்கள் குறித்தும் புரிந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை கோவிட்-19 கொறொனா கொல்லுயிரி தொற்றால் ஒன்டாரியோவில் சுமார் 300 உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன், ஏழாயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment