பொலிவூட் திரையுலகின் மூத்த பெரும் நடிகர் ரிஷி கபூர் உடல்நலக் குறைவால் இன்று மும்பை மருத்துவமனையில் காலமானார். இறக்கும் போது அவருக்கு அகவை 67 ஆகும்.கடந்த 2018ம் ஆண்டு முதல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நியூயோர்க்கில் சிகிச்சை பெற்று கடந்த செப்ரெம்பர் இறுதியில் இந்தியா திரும்பியிருந்தார்.
இந்நிலையில் நேற்று புதன்கிழமை மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில், முப்பை H N Reliance மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று ஏப்ரல் 30ம் நாள் வியாழக்கிழமை உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
1970ம் ஆண்டுகளில் அவரது தந்தை ராஜ் கபூருடன் குழந்தை நட்சத்திரமாக தோன்றியிருந்த ரிஷிகபூர், 1973இல் பொபி திரைப்படத்தில் பதின்ம வயது இளைஞனாக தோன்றி நடித்தமை பெரும் வெற்றியைக் கொடுத்தது.
தொடர்ந்து 1980, 1990 களில் நடித்த Khel Khel Mein, Karz ,Chandni போன்ற திரைப்படங்கள் பெரு வெற்றியை தேடிக் கொடுத்தது.
பொலிவூட் நடிகை நீத்து சிங்கை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ரன்பீர் கபூர்(பொலிவூட் நடிகர்) என்ற மகனும், ரிதிமா கபூர் என்ற மகளும் உள்ளனர்.
மறைந்த நடிகர் ரிஷி கபூருக்கு திரையுலக்தினரும், அரசியற் பிரமுகர்களும் இரங்கல் வெளியிட்டு வருகின்றனர்.

Comments
Post a Comment