Skip to main content

கொல்லுயிரி கொறொனாவும் ராஜபக்ச அன்ட் கோ வியாபாரமும்.

ஸ்ரீலங்காவில் கோவிட்-19 கொறொனொ கொல்லுயிரி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுவதாகவும், தற்போது அமுலில் உள்ள காவற்துறை ஊடரங்கு படிப்படியாக தளர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை சிங்கள கிராமங்களை நோக்கிய நிவாரண திட்டங்களும், ஐந்தாயிரம் ரூபா வரையான ரொக்கப்பணமும் வழங்கப்பட்டுவருகிறது.

ஆனால் வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசங்களில் சில இடங்களில் கண்துடைப்புக்காக மந்தகதியில் நிவாரணங்கள் வழங்கப்பட்டாலும், போரால் பாதிக்கப்பட்ட வன்னி பெருநிலப்பரப்பில் பஞ்சத்தால் உயிர் துறக்கும் நிலையில் மக்கள் அல்லலுறுகின்றனர்.

தென்னிலங்கை மற்றும் சிங்கள கிராமங்களில் அரச நிவாரணம் ஒருபக்கம், அரசியல் வாதிகள் தாம் பிரதிநிதித்துவம் செய்யும் பிரதேசங்களில் மேற்கொள்ளும் பிரத்தியேக நிவாரண நடவடிக்கை என்று தொடர்க்கின்றது.
அரச அதிபரி கோட்டபாய ராஜபக்சவும், காபந்து அரசின் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் ராஜபக்ச நிறுவனத்தின் அரசியலை செவ்வனே முன்னெடுக்கின்றனர்.

இந்த நிறுவனத்துக்கு துதிபாடும் அரசியல் கூட்டம், அமையப் போகும் புதிய அரச நாடாளுமன்றில் பெரும்பாண்மையாக காணப்படும் என்பதில் ஐயம் இல்லாத நிலையிலும், கொல்லுயிர் கொறொனா தொற்றால் நாடாளுமன்றத் தேர்தலுக்கான நாள் நிர்ணயம் செய்யப்படாத நிலையிலும், கேட்பார் இன்றி அரச நிதி ராஜபக்ச நிறுவன அரசை அடுத்த பத்தாண்டுகளுக்கு திடமான நிறுவுவதற்கு பலமான அடித்தளத்தை அமைக்க வாரி இறைக்கப்படுகின்றன.

வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதியின் அரசியல் சீரழிவு நிலையும், கேட்பார் அற்ற நிலையில் மக்களின் அவல நிலையும் தொடர்கிறது.

ஆட்சி பீடம் ஏறியதும், அடுத்த நாளே சிறையில் உள்ள சிங்களப் படைகள் வீடு திரும்புவர் என்று உரைக்கக் கூறிய கோட்டபாய, மெதுவாக தனது வாக்குறுதியை நிறைவேற்றி வருகின்றார்.

அதன் நீட்சியாக கொறொனா கொல்லுயிரி தொற்றை காரணம் காட்டி, சிங்களக் கைதிகளை விடுதலை செய்துவரும் சிங்கள அரசு, இதுவரை எந்தவொரு தமிழ்க் கைதிகளையும் விடுவிக்கவில்லை.

ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்ற நாடகம் ஆடி நல்லாட்சி என்ற பெயரில் ஆட்சி அமைந்த மைத்திரிபால சிறிசேன, ஆனந்த சுதாகரன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையை 2018ம் ஆண்டில் இருந்து விடுவிப்பது போன்று அவ்வப்போது ஊடகங்களை சூடேற்றிய போதும் இறுதி வரை எதுவும் செய்யவில்லை.

2008-ம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சுதாகருக்கு, ஆயுள் தண்டனை வழங்கி மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதனடிப்படையில் அவர் மகசின் சிறைச்சாலையில் தண்டனையை அனுபவித்து வரும் நிலையில் அவரின், மனைவி யோகராணி நோய்வாய்ப்பட்டநிலையில் 2018 மார்ச்சில் உயிரிழந்தார்.

மனைவியின் இறுதிக் கிரியைகளுக்காக 3 மணிநேர சிறைவிடுப்பில் அழைத்துச் செல்லப்பட்ட ஆனந்தசுதாகர் சிறைச்சாலைக்கு திரும்பிய வேளையில், அவருடன் மகளும் சிறைச்சாலைப் பேரூந்தில் ஏற முற்பட்ட சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.
பின்னர் மைத்திரியைச் அக்குழந்தைகள் சந்தித்தித்த வேளையில் விரைவில் தந்தையை விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்வேன் என்று உறுதியளித்து போதும், அக்குழந்தைகளுக்கும் சிங்கள அரசால் கொடுக்கப்பட்ட ஏமாற்றமும் கவலையுமே எஞ்சியது.

ஆனந்த சுதாகரன் மட்டும் இன்றி பல நூற்றுக் கணக்கான தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து, ரணில் தலைமையிலான தேசிய அரசுக்கு முண்டுகொடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசு இறுதிவரை ஒரு கைதியையும் விடுவிக்கவில்லை.

எனினும் மிருசுவில்லில் 2000ம் ஆண்டு படைமுகாமுக்கு அருகே அகவை ஐந்தையுடைய குழந்தை உட்பட எட்டு தமிழர்களை படுகொலை செய்த குற்றவாளியான R.M. Sunil Ratnayake என்ற படைச்சிப்பாயை கடந்த மார்ச் 26ம் நாள், அரச அதிபரின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்.
இதனை ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச் சபையும் கண்டித்திருந்தது. போர்க்குற்றம் உள்ளிட்ட மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் எனும் அர்தமுள்ள கடமையை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற தவறியுள்ளதாக ஐ.நா மனிதவுரிமைச் சபையின் ஆணையாளரின் செய்தித் தொடர்பாளர் Rupert Colville குறிப்பிட்டிருந்தார்.

யாவும் கண்துடைப்பு நாடகங்களாகவே அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

ஆயிரம் நாட்களை தாண்டியும் வீதிகளில் இரவு பகலாக சுழற்சிமுறையில் பட்டினிப் போராட்டம் நடத்திய நூற்றுக் கணக்கான தமிழ் தாய்மாரில் பலர், தம்பிள்ளைகளை காணாது வீதி ஓரமாக உயிர்துறந்தனர்.

இவ்வாறே தமது பாரம்பரிய விவசாய நிலங்களை மீட்க தொடர்போராட்டம் நடத்திய நூற்றுக் கணக்கான மக்களின் சில நிலங்கள் மீட்க பல இன்றும் படைமுகாங்களுக்குள் முடக்கிய நிலையில், அத்தனையும் இன்று கொறொனா கொல்லுயிரியால் பலனற்று போயுள்ளது.

ஸ்ரீலங்கா அரசின் தகவலின் படி இதுவரை 233 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் 7 உயிரிழந்தும் உள்ளனர். அத்துடன் 61 பேர் குணமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

எனினும் கோவிட்-19 கொல்லுயிரி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையோ, மரணித்தவர்களின் எண்ணிக்கை குறித்தே அரச இயந்திரம் தெரிவிக்கும் புள்ளிவிபரங்கள் உண்மையனவையா என்ற கேள்விக்கு பதில் இல்லை.

பொதுத் தேர்தலை குறிவைத்து ஒவ்வொரு நகர்வையும் முன்னெடுக்கும் ராஜபக்ச நிறுவனத்தினருக்கு இந்த கொல்லுயிரி எத்தனை ஆயிரம் உயிர்களை காவு கொண்டாலும் கவலை இல்லை என்பது நான் கூறி நீங்கள் தெரிய வேண்டியதில்லை.

இதேவேளை, அடுத்த தீபாவளிக்குள் நடக்கப்போகும் தேர்தல் வியாபாரமான 16-வது நாடாளுமன்றத் தேர்தலுக்காக, தாயகத்தில் உங்கள் வீட்டுக் கதவை தட்டப்போகும் அரசியல் வியாபாரிகளிடம் மக்களாகிய நீங்கள் கேட்கப்போகும் கேள்விகள் என்ன? அவர்கள் உங்களுக்கு கூறப்போகும் பதில்தான் என்ன?

எனினும் அவர்கள் போடும் இறைச்சித் துண்டுக்காக பின்னால் அணி திரள ஓர் கூட்டமும், மாஜா ஜாலங்களில் மயங்கி ஓட்டுப்போட ஒரு கூட்டமும் இருக்கும் வரை இந்த தீபாவளி வியாபாரம் ஓயப் போவதில்லை என்பதே உண்மை.

-தூரன்

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

கடந்த வாரம் 2% ஆனவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் - கனடிய பொதுச் சுகாதார மருத்துவர்!

கனடாவில் இதுவரை சுமார் 21 இலட்சத்து 13 ஆயிரத்து 924 பேருக்கு கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடிய பொதுச் சுகாதாரத்துறை தலைவர் மருத்துவர் தெரேசா ராம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தும் உள்ளனர். கடந்த வாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு சதவீதமானவர்கள் மட்டுமே கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர் ராம் கூறினார். கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 44 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59,851 பேர் குணமடைந்தும், 8183 பேர் மரணித்தும் உள்ளனர்.