Skip to main content

கோவிட்-19 கனடா: விவசாய, உணவுத் துறைகளுக்கு 252 மில்லியன் டொலர் நிதி உதவி

கோவிட் 19 கொறோனா நுண்மி பெரும்பரவுகையை கட்டுப்படுத்தும் வண்ணம் கனடிய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

கொறோனா தொற்றை கட்டுப்படுத்தும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பை வெளியிட்டுவரும் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ, இன்று 101-வது நாளில் கனடிய விவசாய, உணவுத் துறைகளுக்கான அறிவிப்பை வெளியிட்டார்.

கனடாவின் விவசாய, உணவுத் துறைகளுக்கு 252 மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்குவதாக இன்று அறிவித்தார்.

விவசாயத் திட்டங்களில் முக்கியமான நடவடிக்கைகளையும், பாதுகாப்பானதும், நம்பகத்தன்மையுள்ளதுமான உணவு விநியோகத்தை உறுதி செய்வதன் மூலம் கனேடியர்களுக்கு ஒவ்வொரு நாளும் இன்றியமையாத சேவையை வழங்கும் விவசாயிகள், உணவு வணிகத்தினர், உணவு பதப்படுத்துவோர் ஆகியோருக்கு உதவியாக 252 மில்லியன் டொலரிலும் அதிகமான பணத்தை முதலிடுவதாகவும் இன்று அறிவித்தார்.


இந்தத் துறைகள் மேலும் 200 மில்லியன் டொலர் கடன் பெறுவதற்கான வசதியைப் பரிந்துரை செய்யத் திட்ட மிட்டுள்ளதாகவும் பிரதமர் அறிவித்தார்.

விவசாயிகள், கால்நடை வளர்ப்போர், விவசாய உற்பத்தியாளர்கள், உணவு பதப்படுத்துவோர் ஆகியோருக்கு நேரடியாக உதவிகளை வழங்குவதற்காகக் கனேடிய அரசு பின்வரும் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது:

• உணவு பதப்படுத்துவோர் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கு உதவியாக அதிக தனிநபர் பாதுகாப்புக் கருவிகளைப் பெற்றுக் கொள்வதற்கென 77.5 மில்லியன் டொலர் அவசர பதப்படுத்தல் நிதியத்தை (Emergency Processing Fund) உருவாக்குதல்.
• உணவு உற்பத்தியாளர்கள் கோவிட்-19 காரணமாக எதிர்கொள்ளும் மேலதிக செலவினத்தைச் சமாளிப்பதற்காக 125 மில்லியன் டொலர் வரையான தேசிய விவசாய மீட்சி உதவியை (AgriRecovery) வழங்குதல்.
• உணவு விரயத்தைத் தவிர்ப்பதற்காக Cheese, வெண்ணெய் (Butter) ஆகியவற்றைத் தற்காலிகமாகச் சேகரித்து வைப்பதற்கு ஏற்படும் செலவினத்தைச் சமாளிப்பதற்காக கனேடிய பாற்பொருள் ஆணைக்குழு (Canadian Dairy Commission) பெறக்கூடிய கடன்களின் அளவை 200 மில்லியன் டொலரால் அதிகரித்தல்.
• ஏற்கனவே தயாரானதும் விற்பனை செய்யப்படாததுமான கையிருப்பை, நலிவடைந்த கனேடியர்களுக்கு உதவியளிக்கும் உள்ளுர் உணவு அமைப்புகளுக்கு மீள்விநியோகம் செய்வதற்காக, முதன் முறையாக மிகை உணவுக் கொள்வனவுத் திட்டத்தை (Surplus Food Purchase Program) 50 மில்லியன் டொலர் ஆரம்ப முதலீட்டுடன் ஆரம்பித்தல். உருளைக் கிழங்கு, கோழி இறைச்சி போன்ற பொருட்கள் இதில் உள்ளடக்கப்படலாம்.
• கணிசமான வருமானக் குறைவை எதிர்கொள்ளும் உற்பத்தியாளர்களுக்கு உதவியளிக்கும் AgriStability என்ற மத்திய, மாகாண, பிராந்திய திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இடைக்கால கொடுப்பனவுகளை 50 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக அதிகரிப்பதற்கு மாகாணங்களுடனும், பிராந்தியங்களுடனும் சேர்ந்து செயற்படுகிறது. இந்த மாற்றம் சில மாகாணங்களில் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
• தோட்டக்கலைத்துறையில் தொழிலாளர் பற்றாக்குறையை AgriInsurance
 
திட்டத்தில் ஒர் இடராக இணைத்துக் கொள்வதற்கான சந்தர்ப்பம் குறித்து மாகாணங்களுடனும், பிராந்தியங்களுடனும் இணைந்து பணியாற்றுதல். மாகாண, பிராந்திய பங்காளிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, உற்பத்தியாளர்கள் அறுவடையை மேற்கொள்வதற்குத் தேவையான அளவு ஆளணியைப் பெற்றுக் கொள்ள முடியாதுபோனால் ஏற்படக் கூடிய உற்பத்தி இழப்புக்கு இழப்பீட்டை உறுதி செய்யும் என்றும் பிரதமர் ரூடோ குறிப்பிட்டார்.






Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

கடந்த வாரம் 2% ஆனவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் - கனடிய பொதுச் சுகாதார மருத்துவர்!

கனடாவில் இதுவரை சுமார் 21 இலட்சத்து 13 ஆயிரத்து 924 பேருக்கு கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடிய பொதுச் சுகாதாரத்துறை தலைவர் மருத்துவர் தெரேசா ராம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தும் உள்ளனர். கடந்த வாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு சதவீதமானவர்கள் மட்டுமே கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர் ராம் கூறினார். கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 44 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59,851 பேர் குணமடைந்தும், 8183 பேர் மரணித்தும் உள்ளனர்.