Skip to main content

ஸ்ரீலங்கா மீதான இனப்படுகொலை விடயத்தில் சர்வதேச சட்டங்களின் ஊடாக பொறுப்புக்கூறலை உறுதி செய்யலாம் - ஹரி ஆனந்தசங்கரி

ஸ்ரீலங்கா மீதான இனப்படுகொலை விடயத்தில் சர்வதேச சட்டங்களின் ஊடாக பொறுப்புக்கூறலை உறுதி செய்யலாம் என்று கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்  ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். மே 18,  தமிழ் இனப்படுகொலை நினைவு நாளை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறுதெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின் முழுவடிவம்:
உலகம் மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தபோது, 2009 ஆம் ஆண்டு இலங்கை ஆயுதப் படையினர் தமிழர்கள் மீது புரிந்த படுகொலையில் பொதுமக்கள் 70,000 இற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டு 300,000 இற்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்க்கப்பட்ட இந்த நாளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தமிழர் இனப்படுகொலை நினைவு நாளாக இன்று கடைப்பிடிக்கிறார்கள். 
மரணமானவர்களையும், காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளையும் வாழ்க்கைத் துணைகளையும், நீதியற்ற முறையில் சிறை வைக்கப்பட்டவர்களையும் இன்று மட்டுமின்றி ஒவ்வொரு நாளும் நாம் நினைவுகூருகிறோம். பதினொரு வருடங்களின் பின்னரும் பல கேள்விகளுக்குப் பதில் கிடைக்கவில்லை. உண்மை, நீதி, பொறுப்புக் கூறல் ஆகியவற்றுக்கான தேடல் இன்றும் தொடர்கிறது.
கோவிட்-19 உலகைத் தாக்கி எமது நாளாந்த வாழ்க்கையில் தடங்கலை ஏற்படுத்துவதற்குச் சற்று முன்பாக இலங்கை சர்வாதிகார ஆட்சிக்குத் திரும்பிக் கொண்டிருந்தது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் (UNHRC), மனித உரிமைப் பேரவையின் 30/1, 40/1 ஆகிய தீர்மானங்களுக்கான ஆதரவை இலங்கை விலக்கிக் கொண்டதன் மூலம், உலக ஒழுங்கினுள் இடம்பெற்ற ஒரேயொரு நடைமுறையானதும், ஆக்கபூர்வமானதுமான செயற்பாட்டைத் தடம்புரளச் செய்தது. 
ராஜபக்ச சகோதரர்கள் 2019 ஒக்ரோபரில் ஆட்சியைப் பொறுப்பேற்று, இந்த வசந்தகாலத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் மிகப் பெரும் பெரும்பான்மையைப் பெறவிருந்தார்கள். குடிசார் சமூக செயற்பாடுகளுக்கான சந்தர்ப்பம் சுருங்கி, கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதிகள் தொடர்ந்து சிறைகளில் வாடி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நம்பிக்கையிழந்த நிலையில் அவர்களது அன்புக்குரியவர்களைத் தேடி, இலங்கைத் தீவிலும் வெளியேயும் உள்ள தமிழர்கள் நம்பிக்கை இழந்துகொண்டிருந்ததை அனைத்துத் தகவல்களும் காட்டுகின்றன.
இந்த நாளை நாம் வழமையாக மக்களின் ஒன்றுகூடல்கள், கூட்டு நடவடிக்கை என்பவற்றின் மூலம் கடைப்பிடித்தாலும், கோவிட்-19 இன் அச்சுறுத்தல் காரணமாக இவ்வாண்டில் எமது நினைவேந்தல் அதிக துயரமானதாகவும், சுயமீளாய்வானதாகவும் அமைந்திருக்கும். 26 வருட ஆயுதப் போரினூடு வாழ்ந்த தமிழ்க் கனேடியர்களுக்குக் கோவிட்-19 காரணமான கடந்த ஒன்பது வார கால தனிமைப்படுத்தல் நாம் கடக்கவேண்டிய இன்னல்களை நினைவுபடுத்துகிறது. கடந்த தசாப்தங்களில் நாம் கொண்டிருந்த மீண்டெழுந்தன்மை, கோவிட் இன் பின்னரான சகாப்தத்தில் எமது சமூகத்தைக் கட்டியெழுப்ப எம்மைத் தயார்ப்படுத்தியுள்ளது.
போரின் இறுதிக் கட்டத்தில் புரியப்பட்ட போர்க் குற்றங்கள், மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை என்பவற்றுக்குப் பொறுப்பானவர்களைப் பொறுப்புக் கூறச் செய்வதற்கு உலகெங்கும் உள்ள தமிழர்கள் தொடர்ந்து உறுதிபூணும் சகாப்தமாக இந்தப் புதிய சகாப்தம் அமையவேண்டும். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், சர்வதேச நீதிமன்றம் போன்ற தற்போதுள்ள சர்வதேச சட்ட வழிமுறைகளின் ஊடாகவும், தனிப்பட்ட நாடுகள் சர்வதேச நியாயாதிக்கத்தை நிலைநாட்டுவன் மூலமாகவும் பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்படலாம். 
அதேவேளையில், உலகெங்கும் உள்ள புலம்பெயர் தமிழர் சமூகம், மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கு அவரவர் அரசுகளுடன் செயலாற்றவேண்டும். ஷவேந்திர சில்வாவுக்குப் பயணத் தடை விதித்த விடயத்தில் அமெரிக்காவில் உள்ள சமூகம் ஆற்றிய பணி இந்த மூலோபாயத்தின் சிறந்த உதாரணமாகக் குறிப்பிடப்படலாம். இலங்கைத் தீவில் பொறுப்புக் கூறல், நீதி, மனித உரிமைகள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு கனேடிய அரசுடனும், தமிழ்க் கனேடிய சமூகத்துடனும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களுடனும் நான் தொடர்ந்து பணியாற்றுவேன்.
இறுதியாக, மருத்துவமனைகளிலும், உணவுச்சாலைகளிலும், கோப்பி விற்பனை நிலையங்களிலும், விநியோகப் பணி மூலமும், பலசரக்கு வணிக நிலையங்களிலும் துணிவான செயற்பாட்டாலும், கடின உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும் எம்மைப் பாதுகாக்கும் தமிழ்க் கனேடியர்கள் உள்ளடங்கலாக அனைத்து முன் வரிசைப் பணியாளர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவிக்கிறேன். பொறுப்புக் கூறல், நீதி, சமாதானம் ஆகியவற்றை நோக்கிய பாதையில் நாம் கூட்டாகத் தொடர்ந்து செல்வோம். இலங்கை மக்கள் இழந்தவற்றையும், தொடர்ந்து இழக்கப்படுபவற்றையும் மீளக் கட்டியெழுப்ப ஆரம்பிப்பதற்கு இது இன்றியமையாத ஒரு நடவடிக்கையாகும்.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

ஓன்டாரியோவில் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

ஓன்டாரியோவில் கோவிட்-19 கொறோனா நுன்மித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இன்று மீண்டும் அதிகரிப்பு நிலை பதிவாகியது. இன்றைய தினம் புதிதாக 511 தொற்றுக்களும் 55 இழப்புக்களும் பதிவாகியது. இந்நிலையில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 17119 ஆகவும் இவர்களில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1249 ஆகவும் உயர்வடைந்தது. நேற்றைய தினம் 421 தொற்றுக்களும், 39 இழப்புக்களும் பதிவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் இந்த அதிகரிப்பு நிலை காணப்படுகிறது. நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் கோவிட்19 தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கான காரணமாக பார்க்கப்படுகின்றது. ஒன்டாரியோவில் உள்ள 910 நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களில் கடந்த 24 நேரத்தில் சுமார் 49 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அத்துடன் குறித்த இல்லங்களில் இருந்து 167 புதிய தொற்றுக்களும் பதிவாகியுள்ளன. அத்துடன், கோவிட்19 தொற்றிற்கு உள்ளானவர்கள் இனம் காணப்பட்டவர்களில் இதுவரை 11,390 பேர் குணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஒன்டாரியோவி...