ஒன்றாரியோ அரசு அவசரகால நடவடிக்கைகளை ஜூன் 19ம் நாள் வரை நீடித்துள்ளது. ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் அவசரகாலச் சட்டம் ஜூன் 9ம் நாளோடு காலவதியாகும் நிலையில், இது ஜூன் 30 வரை நீடிக்கப்படலாம் எனக் கூறப்பட்டிருந்தாலும் அரசு 10 நாட்களுக்கு மட்டும் அவசரகாலச் செயற்பாடுகளை நீடித்துள்ளது.
கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்றை கட்டுப்படுத்தும் வண்ணம் கொண்டுவரப்பட்ட அவசரகால உத்தரவுகளுக்கு அமைய உள்ளக உணவகங்கள், பேரங்காடிகள், சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் முடி திருத்தகங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருப்பதுடன் ஐந்து பேருக்கு மேல் ஒன்று கூடுவதுவும் தடைசெய்யப்பட்டிருந்தது.
இந்த அவசரகால உத்தரவுகள் தொடர்ந்து பேணுவது மிகவும் முக்கியமானதாக உள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்வை படிப்படியாகவும் பாதுகாப்பாகவும் மீண்டும் மீள கொண்டுவரும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம் என்று ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்தார்.
எதுவாயினும் தொற்றுநோய்ப் பரவல் தொடர்பான தகவல்களை அடிப்படையாக் கொண்டே முடிவுகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை முதற்படிநிலை அமுல்ப்படுத்தப்பட்டு பலவாரங்கள் கடந்துள்ள நிலையில், இரண்டாம் நிலை எதிர்வரும் வாரம் அமுல்ப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் பிரகாரம் குழந்தைகள் பராமரிப்பு நிலையங்கள் எதிர்வரும் வாரம் முதல் மீளத் திறக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Comments
Post a Comment